பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 130 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையில் காவல்துறை மற்றும் சீருடைப்பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு, காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல், முதல்நிலைக் காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் தலைவர் வரையிலான 5 அலுலர்களுக்கும், விரல் ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையில் இரண்டு பேருக்கும் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் வீரதீரச் செயலுக்கான காவல் பதக்கம், மணல் திருட்டைத் தடுக்கும் போது உயிர்நீத்த எஸ்.ஜெகதீஷ் துரை என்பவருக்காக அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுகிறது. அதனுடன் 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.