தமிழ்நாடு

அண்ணாவிருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசியிருக்கிறார் - தமிழிசை செளந்தர்ராஜன் வருத்தம்

அண்ணாவிருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசியிருக்கிறார் - தமிழிசை செளந்தர்ராஜன் வருத்தம்

Veeramani

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை "இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்" என்று ஒருமையில் கூறியுள்ளார் என வருத்தத்துடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியுள்ளார்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டு கல்வித்துறை, இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மற்றும் சென்னை வானவில் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை நடத்தின.



இதை தொடக்கி வைத்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, " விழாவில் பங்கேற்க இயலாது என்று நான் உதட்டளவில் தான் கூறினேன் ஆனால் மனதளவில் அதை ஏற்கவில்லை. பல்வேறு பணிகளுக்கு இடையில் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்டு வந்துள்ளேன். நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். மரக்கன்றுகள் நடுவது எனக்கு மிகுந்த ஆர்வம் அந்த வகையில் இங்கு பலா மரக்கன்றை நடுவதற்காக கொடுத்தார்கள் இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் மூன்று இடங்களில் மண் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள் எட்டயபுரம், திருவல்லிக்கேணி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மண் கொண்டு வந்திருந்தார்கள் இந்த மண்ணின் புகழ் மரத்தின் வாசனையுடன் சேர்ந்து இங்கு வீசும்.



பாரதியாரின் பாடல்கள் குறித்து நாம் நிறைய அறிந்திருப்போம் அவரின் உரைநடை புத்தகங்களையும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும். உடல் நலனை பேணுவது குறித்து பாரதியார் தனது உரைநடையில் தெரிவித்துள்ளார். நாம் சங்ககாலம் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், கொரோனா காலம் என்பதை இந்த நூற்றாண்டை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. உலக அளவில் இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் நமது உணவு முறை அதை மாற்றி விட்டது. நமது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் கலாச்சாரத்தை தற்போதைய கொரோனா தோற்று பரவலுக்கு பிறகு வெளிநாட்டினரும் பின்பற்ற தொடங்கிவிட்டனர். உடல் நலமும் மன நலமும் பெற்றால் எல்லா நலமும் பெறலாம் என பாரதியார் கூறியுள்ளார்.

பெண்கள் உயர்விற்காக பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் வேண்டும் என்று தெரிவித்த அவருக்கு பெண்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். சமூக இணையதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகுந்த பயமாக உள்ளது இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம் எனவே இணையத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்துங்கள் திட்டுவதற்கு கூட. தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள். கை உடையவர்களாக இருந்தாலும் தமிழை வணங்குவோம் விமர்சனம் என்பது தமிழரின் பங்கு ஆனால் அதை மரியாதை சொற்களுடன் பயன்படுத்த வேண்டும்.

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் "இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்" என்று ஒருமையில் பேசியிருக்கிறார், இரண்டு மாநிலத்தில் ஒரு பெண் ஆளுநராக இருப்பது எவ்வளவு சிரமம், ஒரு தமிழச்சி இரண்டு மாநிலங்களை ஆண்டு கொண்டு இருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். எனவே ஒருவரை திட்டும் போது கூட மரியாதையோடு திட்டுங்கள். ஏனென்றால் தமிழுக்கு மரியாதை உண்டு, தமிழக்கு மரியாதை இல்லையென்றால் நீங்கள் தமிழர்களே இல்லை எனவும் என தமிழிசை செளந்தர்ராஜன் வருத்தப்பட்டு பேசினார்.