தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்... விலங்குகள் நல வாரியம்

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்... விலங்குகள் நல வாரியம்

webteam

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் தொடரப்பட்டிருந்தால், அது வாபஸ் பெறப்படும் என வாரியத்தின் செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வாரியத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான அஞ்சலி ஷர்மாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ளார்.

விலங்குகள் நல வாரியம் சார்பில், அது போன்று ஏதேனும் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அது உடனடியாக வாபஸ் பெறப்படும் என்றும் செயலர் கூறியிருக்கிறார். உச்ச நீதிமன்றமோ அல்லது நாட்டின் எந்த நீதிமன்றத்திலாவது விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வழக்கு தொடர வேண்டும் என்றால், வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என்றும் வழக்கறிஞருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.