தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தியது போன்று இந்தாண்டும் புகார் இல்லாமல் நடத்த வேண்டும் என விலங்குகள் நல வாரிய தலைவர் குப்தா தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். விலங்குகளை துன்புறுத்துவதாக ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியதால் ஜல்லிக்கட்டு தடை ஏற்பட்டது. பின்னர் தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.
இதனையடுத்து, ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 15 ஆம் தேதியும், பாலமேட்டில், ஜனவரி 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் வனம், சுற்றுச்சூழல் குறித்து, மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.பி. குப்தா சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே சண்டைகள் நடைபெறக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கை
மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே உள்ளது. மத்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி இல்லாமல் செயல்படும் விலங்குகள் நல அமைப்புகள் அத்தனையுமே சட்டவிரோதமானவை. தமிழகத்தில் 2019-ல் நடைபெறும் ஜல்லிக்கட்டை கண்காணிக்க கண்காணிப்புக்குழு உருவாக்கப்படும். 2018 ஜனவரியில் விதிக்கப்பட்டதை போன்ற விதிமுறைகள் 2019லும் விதிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளை விலங்குகள் நல வாரியத்தின் கண்காணிப்புக்குழு முழுமையாக கண்காணிக்கும். ஜல்லிக்கட்டு கண்காணிப்புக்குழுவில் விருப்பப்பட்டால் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஜல்லிக்கட்டில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.