குதிரை மருத்துவ முகாம் PT
தமிழ்நாடு

சிப் பொருத்தி குதிரையை கண்காணிக்கும் முயற்சி..சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட கிரித்திகா உதயநிதி

தமிழ்நாடு கால்நடை துறையின் சார்பாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை விலங்குகள் நல ஆர்வலர் கிருத்திகா உதயநிதி நேரில் சென்று பார்வையிட்டார்.

webteam

ஆடு, மாடு, நாய், பூனைக்கு அடுத்தபடியாக குதிரை அதிகமாக வளர்க்கப்படுகிறது. செல்லப்பிராணியாக மட்டும் இல்லாமல் வண்டி இழுத்தல், பொது இடங்களில் பயணம், அலங்கார பொருளாக, காவல்துறை ராணுவத்தில் பாதுகாப்பிற்காக என பல்வேறு வகைகளில் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள குதிரைகளின் உடல் நலத்தை பரிசோதிக்கும் விதமாக குதிரைகள் சிறப்பு மருத்துவ முகாம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அதை கால்நடை துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கால்நடை வாரிய உறுப்பினர் சுருதி, விலங்குகள் நல ஆர்வலரும் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னையில் மெரினா, பிராட்வே, வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் 300 முதல் 500 குதிரைகள் இருக்கும் நிலையில், 100க்கும் மேற்பட்ட குதிரைகள் முகாமில் கலந்து கொண்டன. மருத்துவ முகாமில் குதிரைகளின் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டதை தாண்டி ஒவ்வொரு குதிரையையும் அடையாளப்படுத்தும் விதமாக எலக்ட்ரானிக் சிப்புகள் பொருத்தப்பட்டன.

எதற்காக சிப் பொறுத்தப்படுகிறது? என்ன பயன்?

குதிரையின் தோல் பகுதியில் சிரஞ்ச் மூலம் எலக்ட்ரானிக்ஸ் சிப் தசை பகுதியில் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு எலக்ட்ரானிக் சிப்பிலும் ஒவ்வொரு அடையாள எண் இருக்கும். அந்த அடையாள எண்ணை வைத்து குதிரையை அடையாளப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. மேலும் அடையாள எண் அடங்கிய தகவல்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்வதன் மூலம் குதிரையை வளர்ப்பவர், குதிரைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள், குதிரையின் நிறம், குதிரையின் எடை, குதிரையின் உணவு பழக்க வழக்கம் வரை மருத்துவ குறிப்புகளையும் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் குதிரையின் உடல் நலம் குறித்த தகவல்களை தமிழ்நாடு கால்நடை துறை கண்காணிக்கும் என கூறப்படுகிறது.

குதிரை மருத்துவ முகாம்

இதன் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தலாம் என்றும், பாதிக்கப்படும் குதிரைகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக சென்னையில் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் ஊட்டி, கொடைக்கானல், பழனி உள்ளிட்ட இடங்களிலும் நடத்தப்படும் என தெரிவிக்கிறார், தமிழ்நாடு கால்நடை துறையின் செயலாளர் மங்கத் ராம் சர்மா.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு கால்நடை துறையின் செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதற்கட்டமாக சென்னையில் குதிரைகள் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஊட்டி கொடைக்கானல் பழனி உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறும். கால்நடை மருத்துவ கிளினிக்குகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை 4 என அதிகரிக்கப்படும். சென்னை மாநகராட்சி மூலம் பல்வேறு பகுதிகளில் கால்நடை மருத்துவ கிளினிக்குகளை திறக்க திட்டமிட்டுள்ளோம் அடுத்த மூன்று மாதத்தில் நான்கு மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி

விலங்குகள் நல ஆர்வர்லர் கிருத்திகா உதயநிதி பேசுகையில், கொரோனா காலகட்டத்தில் இருந்து குதிரைகளின் உடல்நலம் குறித்து அக்கறைப்பட்டு வந்துள்ளேன். ஒவ்வொரு குதிரைகளுக்கும் லைசன்ஸ் கொடுக்கப்பட்டு சிப்புகள் பொருத்த வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக ஆலோசித்தோம். தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், மாலை வரை நடைபெற்ற குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த குதிரை வீரர்களும், குதிரைகளும் பங்கேற்றன. குதிரைகள் குறித்த தகவல்களை சேகரித்த கால்நடை மருத்துவ குழுவினர் அடுத்த 10 மாதங்களுக்கு நேரடியாக குதிரைகள் வளர்க்கப்படும் இடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குதிரைகளுக்கும் அடையாள எண்கள் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.