தமிழ்நாடு

பானுப்ரியா மீது நடவடிக்கை: ஆந்திர டிஜிபிக்கு பரிந்துரை

பானுப்ரியா மீது நடவடிக்கை: ஆந்திர டிஜிபிக்கு பரிந்துரை

webteam

சிறுமியை வேலைக்கு வைத்திருந்த விவகாரத்தில் நடிகை பானுப்ரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாவதி என்பவர், சமல்கோட்டா பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 14 வயது மகள், சென்னையில் நடிகை பானுப்ரியாவின் வீட்டில் பணி புரிவதாகவும் அங்கு தனது மகளுக்கு பல கொடுமைகள் நடப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மகளை செல்போனில் தொடர்புகொள்வதற்கு கூட பானுப்ரியா அனுமதிக்காமல் சித்ரவதை செய்வதாகவும் பானுப்ரியாவின் சகோதரர், தனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். தனது மகளை தன்னுடன் அனுப்ப பானுப்ரியா மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ள அப்பெண், இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அதிகாரிகள் நடிகை பானுப்ரியா வீட்டிற்கு சென்று அந்தச் சிறுமியை மீட்டு தேனாம்பேட்டை குழந்தைகள் காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், 14 வயதுக்குள்ளான சிறுமியை வேலைக்கு வைத்திருந்த விவகாரத்திலும் குழந்தை தொழிலாளர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகள் நலக் குழுமம் ஆந்திரா டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது.