தமிழ்நாடு

மதுரை: 13 ஆம் நூற்றாண்டு கோயிலின் ரகசிய அறையில் கண்டறியப்பட்ட பழங்கால சிலைகள்

மதுரை: 13 ஆம் நூற்றாண்டு கோயிலின் ரகசிய அறையில் கண்டறியப்பட்ட பழங்கால சிலைகள்

kaleelrahman

மதுரையில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள பாதாள ரகசிய அறை திறக்கப்பட்டது. இதில், பழங்கால சிலைகள் உள்ளிட்ட 21 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

13 ஆம் நூற்றாண்டில் மாறவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோயிலில் இப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதோடு திருமண வைபவங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழமையான கோயில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மண்டல இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மதுரை திருச்சுனை அகத்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை தொடங்கினர். அப்போது கோயிலை ஆய்வு செய்தனர். அங்கு பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த நிலையில், விழாக் காலங்களில் வீதி உலா வரும் உற்சவர்கள் சிலைகள் இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் சிலை அருகே பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாத ரகசிய பாதள அறை ஒன்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் விஜயன், மேலூர் காவல் டிஎஸ்பி பிரபாகரன், மேலூர் வருவாய்த் துறை துணை வட்டாட்சியர் பூமாயி ஆகியோர் முன்னிலையில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ரகசிய அறையை திறந்தனர்.

இந்நிலையில், ரகசிய அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு பழமைவாய்ந்த மூசிக வாகன விநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் அம்மன் சிலைகளும். அஸ்வ வாகன சூலாயுதம் விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள் என 21 பழமையான ஐம்பொன் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொல்லியல் ஆய்வுக்குப் பிறகே இவை எந்த மாதிரியான சிலை வகை, எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பது தெரியவரும் என உதவி ஆணையர் விஜயன் தெரிவித்தார். இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட சிலைகளை கோயிலிலேயே பாதுகாப்பாக வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.