Anbumani கோப்புப்படம்
தமிழ்நாடு

“மண்ணையும் மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வோம்” - பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை

PT WEB

நெல்லை பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்ற அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தாமிரபரணி ஆறானது, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு கழிவுநீர் சாக்கடையாக ஆறு மாறியிருக்கிறது தெரியவந்துள்ளது. இன்னும் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது வேதனையான விஷயம். இனியாவது தமிழக அரசு இந்த ஆற்றை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

சென்னை கூவம் போல இந்த தாமிரபரணி மாறக்கூடாது. சென்னை கூவத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் 20,000 கோடி என அறிவித்து என்ன பயன்? அதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இப்போது தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவையாவது தடுத்து நிறுத்துங்களேன். காவிரி உள்ளிட்ட ஆற்றுக்கு தான் மத்திய அரசு அனுமதி தேவை. தாமிரபரணி ஆற்றுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. இதை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை.

anbumani

தி.மு.க அரசு, விவசாயிகளுக்கு எதிரி அரசாக உள்ளதாக விவசாயிகள் பேசி வருகிறார்கள். அதை முதலமைச்சர் உறுதிப்படுத்தி விடக்கூடாது. என்.எல்.சி. பிரச்னையை பாமக சும்மா விடப்போவதில்லை. இது பாட்டாளி மக்களின் பிரச்னையோ நெய்வேலி பிரச்னையோ மட்டும் இல்லை, தமிழ்நாட்டின் பிரச்சனை, தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனை, விவசாய பிரச்சனை, மண் பிரச்சனை. இன்று வளமான மண்ணை அழித்துவிட்டால் நாளைக்கு சோறு கிடைக்குமா? இந்த நிலம் காப்பாற்றப்படும் வரை பாமக போராட்டங்கள் நடத்துவோம். மண்ணையும் மக்களையும் காப்பாற்ற, நாங்கள் எந்த எல்லைக்கு செல்லவும் தயங்க மாட்டோம் என்பதை தமிழக அரசுக்கு கூறி எச்சரிக்கிறேன்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயங்கொண்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு அரசு திருப்பி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 12 அரை ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திமுக அரசு திருப்பி அளித்துள்ளது. அதனை வரவேற்கிறோம். அதனை போலவே கையகப்பட்டுள்ள இந்த நிலத்தையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

“ரஜினிகாந்த் பேசியதை வரவேற்கிறேன்!”- அன்புமணி ராமதாஸ்

Rajini

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மதுப்பழக்கம் பற்றி பேசியது குறித்தான கேள்வியை செய்தியாளர்கள் அன்புமணியிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் பேசியதை வரவேற்கிறேன்! தைரியமாக அவர் சொல்லி இருக்கிறார். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. இதற்காக தொடர்ந்து போராடி வருகிறது. ரஜினிகாந்த் கூறிய கருத்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது மக்கள் அனைவரும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை கடைபிடிக்க வேண்டும். இப்போதாவது தமிழக அரசு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் அல்லது படிப்படியாக செயல்படுத்த வேண்டும்” என்றார்.

“கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்”

“சட்டமன்ற பிரச்சனை குறித்து பலமுறை முதல்வரிடம் கூறி இருக்கிறேன். கூலிப்படைகள் இங்கு நிறைய உள்ளன. கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். கூலிப்படைக்கு எதுவும் பயமில்லை. அதற்கு முக்கிய காரணம் கஞ்சா. எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் இது குறித்து குரல் கொடுத்தால் கஞ்சா 4.0, 5.0 என நடவடிக்கை எடுத்து 2,000 பேர் வரை கைது செய்வார்கள். அந்த 2,000 பேரும் ஒரு மாதத்தில் வெளியே வருவார்கள். அதுதான் நடைபெறுகிறது. போதை பிரிவுக்கு 18,000 காவலர்கள் தேவைப்படுகிறது. இதற்கு அரசு, தேவையான காவலர்களை நியமனம் செய்ய வேண்டும். தற்காலிகமாவது இதனை செய்து போதை பழக்கங்களை ஒழிக்க இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

anbumani

கூட்டணி?

வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கேள்விக்கு, “தேர்தலுக்கு நிறைய காலம் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் நெருங்குகையில் முடிவெடுக்கும். எங்களுடைய நிலைப்பாடு, 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்ப கூட்டணியை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம்” என்று தெரிவித்தார்.