பாமக நிறுவனர் ராமதாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாமக தலைவர் அன்புமணி pt web
தமிழ்நாடு

“பட்ஜெட்டில் தமிழ்நாட்டை சொல்லியிருக்கணும்னா எங்களுக்கு 25 எம்.பி கொடுத்திருக்கனும்” - அன்புமணி!

பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டை சொல்லி இருக்க வேண்டுமானால், 25 எம்பிக்களை எங்களுக்கு கொடுத்திருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

ஏமாற்றம் அளிக்கிறது - ராமதாஸ்

மோடி 3.0 அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு உள்ளிட்ட வார்த்தையே இடம்பெறாததும், தமிழ்நாட்டிற்கு பிரத்யேகமாக எந்த திட்டங்கள் இல்லாததும் தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக அரசியல் கட்சித் தலைவர்கள் இதுதொடர்பாக தங்களது கண்டங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூட, தனது அதிருப்தியை பதிவு செய்து இருந்தார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், குறிப்பாக தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

”தமிழகத்தின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது” - இபிஎஸ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப் பட்டிருப்பதைக் கண்டித்து, மத்திய நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதனை ஒட்டிய கருத்தையே பதிவு செய்திருந்தார். அவர் தெரிவித்ததாவது, “இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என தெரிவித்திருந்தார்.

எங்களுக்கு 25 சீட் கொடுத்திருக்கணும் - அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாடு என்று பட்ஜெட்டில் பெயர் வரவில்லை என்றால், தமிழ்நாட்டில் எங்களுக்கு 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாளில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கிடைத்துள்ளது என்பதை தெளிவாக சொல்லுகிறோம்.

மொத்தமாக இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட். 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவுமே வந்திருக்காதா? எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. இந்தியாவிற்கே பொதுவானதுதான் பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு, கேரளாவிற்கு, கர்நாடகத்திற்கு என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெயர் சொல்ல முடியாது. 100 தொழிற்பூங்காக்கள் இந்தியாவில் தொடங்குகிறார்கள். அதில் தமிழ்நாடு வராதா என்ன?” என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் கூட தனது அதிருப்தியை தெரிவித்த நிலையில் அன்புமணியின் இந்த பேச்சு விமர்சனத்தைப் பெற்றுள்ளது.