தமிழ்நாடு

ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

webteam

ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

‘இனிய சுகப்பிரசவம் ஒரு வரம்’ என்ற பெயரில், நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம் சார்பில் சமீபத்தில் முகாம் ஒன்றிற்கு  ஏற்பாடு செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேன் என எதுவுமே எடுக்காமல், மருத்துவரிடமும் செல்லாமல், வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் என்றும், இதுவே சிறந்த வழிமுறை என்றும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த இலவச பயிற்சி முகாம், வரும் 26-ஆம் தேதி கோவைபுதூரில் நடைபெறும் என்றும், அப்போது வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிகாட்டுதல்கள் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. 

இதனையடுத்து, மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே சுகப் பிரசவம் நிகழ்வதற்கான இலவச பயிற்சி முகாமிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.  இதனைதொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் காவல்துறை இயற்கை முறை பிரசவத்துக்கு பயிற்சி என விளம்பரம் செய்தது தொடர்பாக, கடந்த 2 ஆம் தேதி கோவை கோவைபுதூரில் செயல்பட்டு வந்த நிஷ்டை நிறுவனத்தின் தலைவர் ஹீலர் பாஸ்கரும், நிறுவன மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் குனியமுத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

ஹீலர் பாஸ்கரின் கைதுக்கு இயற்கை மருத்துவத்துக்கு ஆதரவான பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், வீட்டிலே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பாக தமிழக அரசும், அமைச்சகர்களும் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், வீட்டிலே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பாக விவாதமும் ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க ஒருநாள் பயிற்சி என விளம்பரம் செய்ததால் எழுந்த சர்ச்சையை அடுத்து கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 நாட்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.