தமிழ்நாடு

ஆனந்த் மகேந்திரா கோரிக்கை : கமலாத்தாள் பாட்டிக்கு கிடைத்த கேஸ் ஸ்டவ், சிலிண்டர்

webteam

கோவை மாவட்டம் ஆலாந்துறை - வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 85 வயது பாட்டி கமலாத்தாள். தள்ளாடும் வயதிலும் உரலில் மாவாட்டி இட்லி சுட்டு விற்று வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் கடையில், ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய்தான். ஒருபோதும் இட்லியின் விலையை உயர்த்தப் போவதில்லை என்று கூறி கமலாத்தாள் பாட்டி அனைவரையும் நெகிழ வைத்தவர். 

இவர் இட்லி மாவை கிரைண்டரில்‌ அரைப்பது, கல் உரலில் சட்னி வகைகளை அரைப்பது என சுழன்று வேலை செய்கிறார். ஆனாலும் விறகு அடுப்பை வைத்து தான் சமையல் செய்கிறார். இதனால் அனலில் அவதிப்பட்டு வந்த போதிலும், வரும் வாடிக்கையாளர்களிடம் பாசத்துடனும், கணிவுடனும் நடந்துகொள்கிறார்.

இவர் தொடர்பான செய்தியை கண்ட மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன், “கமலாத்தாள் பாட்டி இன்னும் விறகு அடிப்பில் வேலை செய்வதை கவனிக்கிறேன். யாராவது அவர் குறித்து தெரிந்தால் தெரியப்படுத்தவும். அவரின் தொழிலுக்கு தேவையான உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறேன். அத்துடன் அவருக்கு எல்பிஜி ஸ்டவ் வாங்கித் தரவும் தயாராக இருக்கிறேன்” என ட்விட்டரில் எனக் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆனந்த் மகேந்திரா ட்விட்டுக்கு பாரத் சமையல் எரிவாயுவின் கோவை மாவட்டக் கிளையிலிருந்து பதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கேஸ் சிலிண்டர் மற்றும் புதிய கேஸ் ஸ்டவ்வை கமலாத்தாள் பாட்டிக்கு பாரத் கேஸ் நிர்வாகிகள் வழங்கும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், பாரத் கேஸ் சார்பில் கமலாத்தாளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.