திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கண்டிதம்பேட்டை கிராமத்தில் தனது பேத்தியுடன் தனித்து வசித்து வரும் மூதாட்டியொருவரின் வீடு கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அவர் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கண்டிதம் பேட்டையில் கடந்த 50 வருடங்களாக ஓட்டு வீட்டில் ராஜகோபால் குஞ்சம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களில் கணவர் ராஜகோபால் மறைந்தபின், மனைவி குஞ்சம்மாள் தன்னுடைய மகன் வழி பேத்தியுடன் வசித்து வந்திருக்கிறார். மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையினால், குஞ்சம்மாளின் வீடு ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. பகல் நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் குஞ்சம்மாளும் அவருடைய பேத்தியும் அச்சத்துடனேயே அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: தெற்கு அந்தமானில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்
அரசு தங்களின் இடிந்த வீட்டுக்கு நிவாரணமாக ஏதேனும் தொகையோ, அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு நடவடிக்கையோ எடுத்து தங்களுக்கு உதவுமாறு அவர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள் இவர்கள்.
- மாதவன்