தமிழ்நாடு

சென்னை கோபாலபுரத்தில் 45 வருடங்களாக சாலை ஓரமாகவே வசிக்கும் குடும்பம்!

சென்னை கோபாலபுரத்தில் 45 வருடங்களாக சாலை ஓரமாகவே வசிக்கும் குடும்பம்!

webteam

தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான மையம், சென்னை - கோபாலபுரம். அந்தப் பகுதியின் பீட்டர்ஸ் சாலையின் ஓரமாகவே ஒரு குடும்பம் 45 ஆண்டு காலமாக வசித்து வருகிறது.

விக்டோரியா (வயது 54), செல்லமுத்து (56 வயது) இவர்கள் தங்களது பேரக்குழந்தைகள் கௌதம் (15 வயது) மற்றும் தீபக் 12 வயது ஆகியோருடன் சென்னை கோபாலபுரம் பீட்டர்ஸ் சாலையின் ஓரமாக வசித்து வருகின்றனர்.

தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் மாதம் 600 ரூபாய்க்கு இரண்டு வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தா விக்டோரியா. தற்போது அந்த வேலையும் இல்லை. காவலாளியாக பணி செய்து வருகிறார் செல்லமுத்து. இவர்களுக்கு வரும் வருமானத்தைக் கொண்டு பேரக்குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.

கௌதம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது பேரக்குழந்தை தீபக் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகள் அமுலு, இவர்களை விட்டுச் சென்று வேறு எங்கோ வாழ்ந்து வருகிறார். எனவே, இரண்டு குழந்தைகளையும் சிறுவயதிலிருந்தே இவர்களே வளர்த்து, படிக்கவைத்து வருகின்றனர்.

இவர்களுக்குக்கு பொதுமக்கள் அவ்வப்போது உணவும் பொருளும் வழங்கி வருகின்றன. அந்த உறுதுணையுடனும் இவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

"மழைக்காலம் வரும்போது பக்கத்துல இருக்கு பிரிட்ஜுக்கு கீழே ஒதுங்கிடுவோம். இரவு முழுக்க மழை பெய்தால், எங்களுக்கு தூங்கவும் முடியாம போய்டும்" என்கிறார் செல்லமுத்து.

"வெயில் கொளுத்தும் காலத்துலயும் கஷ்டம்தான். ஆனா, எங்களுக்கு எல்லாமே பழகிடுச்சு. நாங்க 45 வருஷமாவே ரோட்டோரமா வாழ்ந்தாலும், எங்களுக்கு வேறு எந்த தொந்தரவும் இல்லைங்க" என்கிறார் விக்டோரியா.

"எங்களுக்கு வீடு ஒதுக்கித் தர்றதா சென்னை மாநகராட்சி அதிகாரிங்க போன வருஷம் சொன்னாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் இப்ப வரைக்கும் யாருமே எங்களை கண்டுக்கலை" என்று ஏக்கத்துடன் சொல்கிறார் செல்லமுத்து.

- ஆனந்தன்