சென்னையில் கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதாக மின்வாரிய பெண் ஊழியர் மற்றும் அவரிடம் கள்ளத் துப்பாக்கிக்கு பதில் பொம்மை துப்பாக்கியை விற்பனை செய்ததாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் மஞ்சுளா. இவருக்கும் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மஞ்சுளாவின் கணவர் கார்த்திகேயன் அவரைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் தங்களின் தகாத உறவுக்கு மஞ்சுளாவின் மகன் ரித்தேஷ் தடையாக இருப்பதாக நினைத்த நாகராஜ் கடந்த பிப்ரவரி மாதம் அவரைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மகன் உயிரிழப்புக்கு பழி வாங்க நாகராஜ் விடுதலையானதும் அவரைக் கொலை செய்ய மஞ்சுளா திட்டமிட்டு இருந்ததாகத் தெரிகிறது.
இதற்காக கள்ளத்துப்பாக்கி வாங்க சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் சுரேஷிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கள்ளத்துப்பாக்கிக்கு பதில் பொம்மை துப்பாக்கியை கொடுத்து மஞ்சுளாவை ஏமாற்றி விட்டதாக தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மஞ்சுளா கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதை மறைத்து சுரேஷ் மற்றும் பிரசாந்த் ஆகியோர் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணையில் மஞ்சுளா பொய்ப்புகார் அளித்தது தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மஞ்சுளா, சுரேஷ் மற்றும் பிரசாந்தை கைது செய்துள்ளனர்.