தமிழ்நாடு

சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்

சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்

PT

புதுமையை விரும்பும் முதியவர் ஒருவர் தனது ஆட்டோவை சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இயக்கி வருகிறார். அவரது முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த முதியவர் (80) ஒருவர், அவரது ஆட்டோவின் மேல் பகுதியிலும் பின்பகுதியிலும்  சூரிய மின் தகடுகளைப் பொருத்தி அதன் மூலம் கிடைக்கும் சூரிய சக்தியைக் கொண்டு ஆட்டோவை ஓட்டி வருகிறார். சிறு வயது முதலே சந்தையில் விற்பனைக்கு வரும் புதிய பொருட்களை முதலில் வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட இவர் ஒரு லாரி உரிமையாளர்.

இவரது குழந்தைகள் அனைவரும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருவதால், பொழுது போக்கிற்காக ஆழ்வார் திருநகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆரம்பத்தில் பெட்ரோல் மூலம் ஆட்டோவை ஓட்டி வந்த இவருக்குக் காலப்போக்கில் பேட்டரி மூலம் ஆட்டோவை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது.

இதற்காக டெல்லி சென்று 80,000 மதிப்பிலான பேட்டரியை வாங்கிய இவர், அதனைச் சார்ஜ் செய்யச் சூரிய மின் தகடுகளைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கான செயல்முறைகளை யூடியூப் வழியாகத் தெரிந்து கொண்டுள்ளார். வீடியோகளில் விளக்கப்பட்டது போலவே சூரிய மின் தகடுகளை ஆட்டோவில் பொருத்தி அதனை நடைமுறைப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார்.

இது குறித்து முதியவர் கூறும் போது “அரசாங்கம் பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோக்களை சந்தையில் வெளியிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் அரசு அதைக் கொண்டுவருகின்றதைப்போல் தெரியவில்லை. அதுதான் நானே சூரிய மின் தகடுகள் மூலம் இயங்கும் பேட்டரியை பயன்படுத்தி ஆட்டோவை ஓட்டி வருகிறேன்” என்றார்.

மேலும் இதற்கான மொத்த செலவு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சமானது என்றார். இத்தனைப் பெரிய முயற்சியை மேற்கொண்டு அதனைச் சாதித்துக்காட்டிய இந்த முதியவர் எவ்வளவு வற்புறுத்தியும் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார்.