9, 10 தேதிகளில் ஒருங்கிணைந்த வேலூருக்கு தமிழக முதல்வர் தனது முதல்கட்ட பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்ட பரப்புரைக்கு வரும் 9, 10-ம் தேதிகளில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு செல்கிறார். இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...
"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 9, 10 தேதிகளில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தனது முதல்கட்ட பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார். 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு பரப்புரையை தொடங்குகிறார். தொடர்ந்து சோளிங்கர், ராணிப்பேட்டையிலும் பரப்புரையை முடித்துக்கொண்டு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.00 மணிக்கு பள்ளிகொண்டா, கே.வி.குப்பம், மாலை 5.00 மணிக்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். பிறகு 10-ம் தேதி காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
இந்தியாவில் எந்த அரசும் செய்யாத, எந்த முதல்வருக்கும் வராத தைரியத்தை முன்னிறுத்தி 12 ஆயிரத்தி 110 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக, கொடுத்த கடனை ரத்து செய்கிறோம், நகையை மீட்டு தருகிறோம்என்று சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதியை சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார்கள்.
ஆனால் முதல்வர் சொல்லாததை கூட செய்து வருகிறார். கடந்த தேர்தலின்போது வாங்கிய மனுக்களை என்ன செய்தார்கள் என தெரியவில்லை. எங்கு போட்டார்கள் என தெரியவில்லை. தற்போது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தீர்வுகாணப்படும் என்று சொல்கிறார். இதெல்லாம் நடக்கிற காரியமா? அவர்கள் கானல் நீரைபோல் கனவு கண்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாகவே நிகழ்த்திக்காட்டிக் கொண்டிருப்பவர் முதல்வர் அவர்கள்.
நிழலாக இருந்து பேசக்கூடியவர்களுக்கு நிஜமாக இருந்து செயல்படுத்திக் கொண்டிருப்பவர். அண்ணாவின் கொள்கையை மீறி இன்றைக்கு தி.மு.க குடும்பமே கட்சியாகவும், கட்சியே குடும்பமாகவும் உள்ளது. எங்கள் கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம்” என கூறினார்.