எண்ணூர் ஆலை PT
தமிழ்நாடு

எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட இதுதான் காரணம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சொன்ன விளக்கம்

எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவிற்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

PT WEB

எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தின் அம்மோனியம் குளிரூட்டும் கருவி செயலிழந்ததே வாயு கசிவுக்கு காரணம் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 11.45 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர்.

இதற்கிடையில், வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசும் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்தது. அதைத்தொடர்ந்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் :

அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”அம்மோனியம் கசிவின் பாதிப்பு அதிகாலை 4 மணிக்கு பாதிப்பு உணரப்பட்டது. 20 நிமிடத்தில் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. உடனடியாக அம்மோனியம் வாயு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் தொழிற்துறை பாதிகாப்பு சட்டம் 33(a) படி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. நிறுவனத்திடம் விபத்துக்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழில்சாலை பாதுகாப்பை துறை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவு வரை குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

கோரமண்டல் நிறுவனம் சுமார் 12,500 கொள்ளளவு அம்மோனியா செர்த்து வைக்கும் வசதி உள்ளது. கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அம்மோனியாவை நிறுவனத்திக்கு எடுத்துச் செல்ல குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழாயில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே கசிவு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி சரியாக செயல்படவுல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாயு கசிவால் சுமார் 60 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அதில், 5 பேர் ICU வில் வைக்கப்பட்டனர்.

வாயுக்கசிவு விபத்து கடலில் இருந்து 2 அடி தூரத்தில் நடந்துள்ளது. உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. பாதிப்புகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோரமண்டல் நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. அதன் கட்டமைப்புகள் குறித்து கடல்சார் வாரியம் கண்கானித்து வருகிறது” என்று கூறினார்.

கோரமண்டல் விளக்கம் :

நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், ”கப்பலில் அம்மோனியம் கொண்டு வரப்படும் போது உரிய ஆய்வு செய்யப்படும், பின்னர் குழாய் மூலமாக கொள்களனுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்படுகிறது. அதன் அறிக்கைகளை தாக்கல் செய்கிறோம்.

1996 முதல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ற நிறுவனங்களை மூட வேண்டும்.

1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிப்பு உணரப்பட்டது. கடந்த 2021 இது போன்ற சம்பவம் நடைபெற்றது. மக்கள் 120 பேர் வரை மூச்சித்திணறலால் அப்போது பாதிக்கப்பட்டனர். பாதிப்புகள் ஏற்படும் போது தற்காலிகமாக மூடுவதை அதிகாரிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். 8 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நீதி வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பாயம் :

இதையடுத்து வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவே நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கை எடுத்துள்ளது. ஏன் விபத்து நடப்பதற்கு மின் நடவடிக்கை எடுக்கவில்லை மாசுக்கட்டு வாரியம் ஏன்? தொடர்ந்து கண்காணிக்கவில்லை.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அவ்வபோது நிறுவனத்தில் ஆய்வு நடத்தப்பட்டதா? ஏன் அதை செய்யவில்லை. அந்த பகுதி மக்களுக்கு வாயு கசிவின் விளைவு தெரியுமா? மக்கள் கடல் பகுதியில் இருந்தார்களா? அல்லது வீடுகளில் இருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதா?

கோரமண்டல் நிறுவனம் ஏன் அடிக்கடி ஆய்வு செய்யவில்லை. 5 மடங்கு அதிகமாக சேர்த்து வைத்ததே காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சுமத்துகிறது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

விபத்துகள் நடைபெறுவது இயற்கை, விபத்து நடைபெற்றது என்பதற்காக நிறுவனத்தை மூடிவிட முடியாது. ஆனால் அதிலிருந்து தற்காத்து கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொழில்துறை பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டியது கட்டாயம். 40 ஆண்டுகள் பைப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், தற்போது அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அம்மோனியம் கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என தெரிவித்து, கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.