தூத்துக்குடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தூத்துக்குடி|மீன் பதன ஆலையில் அமோனியா கசிவு-சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த 30 பேர்! நடந்தது எப்படி?

ஜெனிட்டா ரோஸ்லின்

தூத்துக்குடியில் மீன் பதன ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் கிட்டதட்ட 30 பேர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில், ’நிலா சீ ஃபுட்ஸ்’ என்ற மீன் பதன ஆலை இயங்கி வருகின்றது. இந்த ஆலையில், இறால், மீன் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, இவற்றை பதப்படுத்துவதற்கும், இவற்றின் தோலை உரிப்பதற்கும் தென் மாவட்டங்கள் மற்றும் ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நிலா சீ ஃபுட்ஸ்

இங்கு நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் ஏற்பட்ட மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்த அமோனியா கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அமோனியா வாயு ஆலை முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், ஆலையில் உள்ளே வேலையில் ஈடுபட்டு இருந்த கிட்டத்தட்ட 29 பெண்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக இவர்களை சொந்த வாகனங்களில் தூத்துக்குடிக்கு உட்பட்ட 3 தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்ற போது, அமோனியா வாயுவால் ஒரு தீயணைப்பு வீரரும் மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில், இவருடன் சேர்த்து மொத்தம் 30 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, இன்று காலை அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி முரளி தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தால்சில்தார், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலா சீஃபுட்ஸ் ஆலையில் கடந்த 2014 ஆம் ஆண்டும் இதே போல, வாயு கசிவு ஏற்பட்டு 54 பேர் மயங்கி விழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.