தமிழ்நாடு

"அதிமுகவின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது" - புகழேந்தி பேட்டி

"அதிமுகவின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது" - புகழேந்தி பேட்டி

கலிலுல்லா

அதிமுகவின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அதிமுகவின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தேன். 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தார்கள். 15 ஆயிரம் கொடுத்துள்ளார்கள். அதன்மூலம் 20 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நேர்காணல் நடத்துவோம் என்று கூறினார்கள்.

ஆனால், நேர்காணல் நடத்தவில்லை. பொதுக்கூட்டத்தை போல கூட்டி, சில மணி நேரங்களில் கூட்டத்தை முடித்து அவர்களாகவே வேட்பாளரை அறிவித்துக்கொண்டார்கள். ஆட்சிமன்ற குழு கூட்டப்படுவதே இல்லை. அது தான் வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டும். இவை எதையும் பின்பற்றாமல், தான்தோன்றித்தனமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவெடுக்கிறார்கள். எந்த காரணமும் இன்றி யாரை வேண்டுமானாலும் கட்சியிலிருந்து தூக்கி எரிகிறார்கள்" என்றார்.

முன்னதாக, சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்களும், கட்சியின் சட்ட விதிகளை மாற்றம் செய்யும் சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்ற விதி மாற்றப்பட்டு, இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்வர் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் சட்ட திட்ட விதிகளை இயற்றுவது, திருத்துவது, நீக்குவது ஆகிய அதிகாரங்கள் பொதுக்குழுவிடம் இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என்ற விதியை பொதுக்குழுவால் கூட மாற்ற இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இவை தவிர சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவில்லை என்றும், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க தவறியதாகவும் திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியை கட்டிக்காத்து ஒற்றுமை பேண வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்களும் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதேபோல், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சரும் எம்பியுமான அன்வர் ராஜா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.