சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த ஆந்திராவைச் சேர்ந்த தனியார் மருத்துவரின் உடலை அம்பத்தூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யக் கொண்டு வந்தனர். தகவலறிந்து அங்கு சூழ்ந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 200 பேர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்கவில்லை என்பதால், உடல் அப்பல்லோ மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
உயிரிழந்த மருத்துவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். 60 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் டிரைவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நெல்லூரிலேயே சிகிச்சையில் உள்ளனர்.