நடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் pt desk
தமிழ்நாடு

ஆம்பூர்: கால்களை பதம்பார்க்கும் கற்கள் - 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

ஆம்பூர் அருகே தார்சாலை அமைக்கப்படாததால் தினந்தோறும் மலைப்பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்தே சென்று திரும்பும் மாணவர்கள்...

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்குப்பம் ஊராட்சியில், தரைக்காடு என்னும் பகுதி உள்ளது. தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இங்கு 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

நடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

இந்நிலையில், இவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு செல்வதற்காக தரைக்காடு பகுதியில் இருந்து மேல்குப்பம் வரை வந்து வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாளாக செய்து வருகின்றனர். அப்பகுதி விவசாயிகள், விளைவிக்கக் கூடிய காய்கறிகளை வாகனங்கள் மூலம் சந்தைகளுக்கு கொண்டுவர கரடுமுரடான மலைச் சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மலைப்பகுதியில் தார்சாலை அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில், தற்போது வரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்திறகு உள்ளாவதாகவும் அரசு உடனடியாக தார்சாலை அமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

இது குறித்து மாதனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் மற்றும் பொறியாளர் மூர்த்தி ஆகியோரிடம் கேட்டபோது... “கந்தன் வட்டம் முதல் தரைக்காடு வட்டம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் மூலம் கற்கள் கொட்டப்பட்டு தற்காலிக மண்சாலை அமைத்துள்ளோம். தற்போது நபார்டு மூலம் தார்சாலை அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்து முடித்துள்ளோம். விரைவில் டெண்டர் விடப்பட்டு சாலை போடும் பணியை தொடங்க உள்ளோம்” என தெரிவித்தனர்.