செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி துர்காதேவி (25). இருவரும், காதலித்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்கா தேவி கடந்த (10.11.2024) தேதி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை பின் அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
பணியில் இருந்த செவிலியர்கள், மற்றும் பணியில் இருந்த சியாமளா என்ற மருத்துவர் துர்கா தேவிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், துர்கா தேவிக்கு பெண் குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால், தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகமாகியுள்ளது என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, துர்காதேவியை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், இறுதியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நேற்று இரவு (13.11.2024) துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், துர்கா தேவியின் உடல் இன்று (14.11.2024) எல்.மாங்குப்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்காதேவிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தான் துர்காதேவி உயிரிந்ததாகக் கூறி ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி துர்கா தேவியின் உறவினர்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி தலைமையிலான வருவாய்த் துறையினர், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் கண்ணகி ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து புகார் அளித்தால், துர்காதேவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் கண்ணகியிடம் கேட்டபோது...
துர்காதேவிக்கு மருத்துவம் அளித்த ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்குச் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.