தமிழக-ஆந்திரா நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திர அரசு பாலாற்றில் கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி வினாடிக்கு 1400 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பாலாறு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்று கொண்டிருக்கிறது.
ஆற்றின் இரு கரைகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் தரைப்பாலத்தை இரு இளைஞர்கள் கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கிய 2 இளைஞர்களும் இரு சக்கர வாகனத்துடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
அங்கு பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் இதைப்பார்த்து உடனடியாக 2 இளைஞர்களை போராடி மீட்டனர். இருப்பினும் தண்ணீர் மிக வேகமாக வந்து கொண்டிருப்பதால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனத்தை ஆற்றில் இருந்து மீட்க முடியவில்லை. கயிறு மூலம் இருசக்கர வாகனத்தை பாலாற்றிலேயே கட்டி வைத்து உள்ளனர் பொதுமக்கள்.