தமிழ்நாடு

மேம்பால விரிவாக்க பணிக்காக தோண்டபட்ட பள்ளத்தில் விழுந்த நபர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

மேம்பால விரிவாக்க பணிக்காக தோண்டபட்ட பள்ளத்தில் விழுந்த நபர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

webteam

ஆம்பூரில் மேம்பால விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த நபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம், சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் துவங்கப்பட்டன. அதற்கான பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வரும் நிலையில் ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் 5 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டியுள்ளனர்.

இந்நிலையில், அப்பள்ளத்தில் வங்கி மற்றும் பிஎஸ்என்எல் தொலைதொடர்புகளுக்கு தேவையான கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் கேபிள் இணைப்புகளை மீண்டும் இணைக்காத்தால் நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நிலை தடுமாறி தனது வாகனத்துடன் தவறி விழுந்துள்ளார்.

நல்வாய்ப்பாக அவருக்கு பெரிய காயங்கள் ஏற்படவில்லை. உடனடியாக சிறுகாயங்களுடன் பள்ளத்திற்குள் தவித்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இந்நிகழ்வு தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் பள்ளங்கள் தோண்டினால் அதற்கு முன்பாக எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.