அம்பேத்கர், திருவள்ளுவர், உயர்நீதிமன்றம் twitter
தமிழ்நாடு

”நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் இருக்கக் கூடாதா?” - உயர் நீதிமன்ற சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் சிலைகள், உருவப்படங்கள் இடம்பெற அனுமதிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Prakash J

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. டாக்டர் அம்பேத்கர் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்களின் உருவப்படங்களை நீதிமன்றங்களில் திறக்க அனுமதி கோரி, பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன.

சென்னை உயர்நீதிமன்றம்

எனினும், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், கடந்தகால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களைத் தவிர, மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் சிலைகள், உருவப்படங்கள் இடம்பெற அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் இடங்களில் அம்பேத்கரின் சிலைகள், படங்கள் இருப்பது எந்த வகையிலும் தவறில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை, அம்பேத்கரின் படத்தையும் சிலைகளையும் அப்புறப்படுத்தும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அம்பேத்கர் புகைப்படங்களை அப்புறப்படுத்தும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.