தமிழ்நாடு

தொடர் நம்பிக்கை.. ஓய்வில்லாமல் 24 மணி நேரமாக சுழலும் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

தொடர் நம்பிக்கை.. ஓய்வில்லாமல் 24 மணி நேரமாக சுழலும் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

jagadeesh

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர்  70 அடி ஆழத்துக்கு சென்ற குழந்தை தற்போது 80 அடி ஆழத்தில் உள்ளது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். ஏறக்குறைய 25 மணி நேரமாக சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தையை மீட்க பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. இதனிடையே மணல் மூடியுள்ளதால் சுர்ஜித்தின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான் என்ற சம்பவம் வெளியே தெரியவந்த பின், ஓரிரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னமும் கூட அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று கிட்டத்தட்ட 24 மணி நேரமாகி விட்டது. விஜயபாஸ்கருடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் உடனிருந்தார்.

ஆனால், விஜயபாஸ்கர் சற்றும் ஓய்வில்லாமல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, ஊடகங்களுக்கு சரியான தகவல்களை கொடுப்பது என பம்பரமாக சுழன்றுக் கொண்டு இருக்கிறார். நேற்று வந்த உடையை கூட மாற்றாமல் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்போனில் சார்ஜ் குறையாமல் இருக்க "பவர்பேங்க்" ஆகியவற்றுடன் அமர்ந்துள்ளார். சிறுவனின் நிலை குறித்து பொது மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக சரியான தகவல்களை குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தெரிவித்து வருகிறார். பல்வேறு மீட்பு படைகள் வந்தாலும் அதனை ஒருங்கிணைக்கும் பணிகளையும் பார்வையிட்டு வருகிறார்.

மிக முக்கியமாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஊடங்களுக்கு பேட்டியளிக்கும் போது இப்போது வரை நம்பிக்கையை விடவில்லை அவரின் ஒவ்வொரு பேட்டியிலும் "குழந்தை பத்திரமாக மீட்கப்படுவான்" என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது அனைவருக்கும் நம்பிக்கை கொடுப்பதாகவே இருக்கிறது. அதுதான் தொலைக்காட்சியில் மீட்பு காட்சிகளை பார்ப்பவர்களுக்கும் டானிக்காகவும் இருக்கிறது.