சென்னை ஐஐடியில் முதல்முறையாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி பாட நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி என்பவர் கொடுத்த 110 கோடி நன்கொடை மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி பள்ளி, இந்தியாவில் AI துறையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கிறார்கள் ஐஐடி பேராசிரியர்கள்.
சென்னை ஐஐடியில் 1975ம் ஆண்டு பயின்ற மாணவர் சுனில் வாத்வானி. பட்டப்படிப்பு ஐஐடியில் முடித்தவுடன் சுகாதாரத் துறையில் முதலீடு செய்து புதிய தொழில் தொடங்கிய வாத்வானி கடந்த 50 ஆண்டுகளில் வாத்வானி நிறுவனங்களை பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்த்துள்ளார்.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்க உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான ஆராய்ச்சி பள்ளி அமைப்பதற்கு அதிகபட்ச தொகையாக 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்திய ஐஐடிகளில் தனி ஒரு நபர் அதிகமாக நன்கொடை வழங்கியது இதுதான் முதல்முறை என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, “புதியதாக தொடங்கப்பட்ட AI மற்றும் Data Science பள்ளியில் AIDA எனும் பெயரில் செயற்கை நுண்ணறிவுகள் குறித்த படிப்பு சொல்லித்தரப்படவிருக்கிறது. இதை தொடங்குவதற்கு காரணமாக இருந்த வாத்வானியின் பெயர் கொண்டே தொடங்கப்படவிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் B.Tech மற்றும் M.Tech பிரிவு முதலிய ஆராய்ச்சி படிப்புகள் உடன் இங்கிலாந்தின் பர்க்ஹிங்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணை Msc படிப்பு என 15 பேராசிரியர்களோடு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இதற்கு முன்பு செயற்கை நுண்ணறிவுக்கு என தனி பாடத்திட்டம் இருந்தாலும் பாட பிரிவாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் வருடத்திற்கு ஒரு இளநிலை படிப்பில் 30 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், வேளாண்மை, போக்குவரத்து, நிதி பகுப்பாய்வு, உற்பத்தி, சுற்றுச்சூழல், எரிசக்தி பாதுகாப்பு கல்வி, உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி இருக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜே.இ.இ மற்றும் ஐஐடி கேட் தேர்வுகள் மூலம் தரவு அறிவியல் அல்லது செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் பட்டய படிப்பு பெரும் இளம் மாணவர்களை அதிக அளவில் வேலைக்கு எடுப்பதாக" தெரிவிக்கிறார் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி.
தமிழ்நாடு அரசின் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு சென்னை ஐஐடியில் மேற்கொள்ளப்படும் ஏஐ ஆராய்ச்சிகள் பெரும் பாய்ச்சலாக இருக்கும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். வகுப்பறை பாடம் மட்டுமின்றி தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான தானியங்கி செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பான தொழிற்கல்வி செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவும் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய AI பள்ளி குறித்து பேசியிருக்கும் முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி, “அடுத்த ஐந்து வருடங்களில் சர்வதேச அளவில் ஏஐ கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐந்து இடத்திற்குள் சென்னை ஐஐடியும் இடம்பிடிக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.