தமிழ்நாடு

”ராஜினாமா பண்ணிடுவேன்” - அண்ணாமலை பேச்சும் அதிமுக தலைவர்களின் ரியாக்‌ஷனும்! - தொகுப்பு

”ராஜினாமா பண்ணிடுவேன்” - அண்ணாமலை பேச்சும் அதிமுக தலைவர்களின் ரியாக்‌ஷனும்! - தொகுப்பு

JananiGovindhan

அதிமுக உடனான கூட்டணி நிலைப்பாட்டை முன்னெடுத்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக பணியாற்றுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக வந்த தகவல்தான் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை தொற்ற வைத்திருக்கிறது.

நாராயணன் திருப்பதி

இருப்பினும், “நல்ல திரைக்கதை, வசனத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். எங்களுடைய கட்சியில், 4 சுவரில் நடக்கக்கூடிய விஷயத்தை இட்டுக்கட்டி வேண்டுமென்றே பரப்பியிருக்கிறார்கள். இது தவறானது. இது முற்றிலும் எங்களுடைய உட்கட்சி விவகாரம். நாங்கள் பேசாததை சித்தரித்து பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம்.” என தமிழ்நாடு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரத்தில் விளக்கமும், மறுப்பும் தெரிவித்திருந்தார்.

”அது அவரது சொந்த கருத்து..” - நயினார் நாகேந்திரன்

இப்படி இருக்கையில், “அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானதாக இருக்கும்” என திருநெல்வேலியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் அதில், “தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி இதுவரை அதிமுகவுடனும், திமுகவுடனும் கூட்டணியிட்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. எனவே கூட்டணி முடிவுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்வது தான் இறுதியாக இருக்கும். கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.

கருத்து சொல்வதற்கு அவருக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அதிமுகவின் ஆதி ராஜாராம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அது அவரது சுதந்திரம். மற்றவர்களை கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவையில்லை. அதிமுக, திமுக, காங்கிரஸ் என எந்த ஒரு கட்சியிலும் உட்கட்சி பிரச்னை இருக்கும். அதற்கு நாம் கருத்து சொல்ல முடியாது.” எனக் கூறினார் நயினார் நாகேந்திரன்.

அதிமுகதான் முடிவு செய்யும் - ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், யாருக்கு எத்தனை சீட் வழங்க வேண்டும் என்ற முடிவை அதிமுகதான் எடுக்கும். அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” என முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கருத்து தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் கருத்தை வரவேற்கிறேன் - ஆதி ராஜாராம்

அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அண்ணாமலை கூறியிருக்கும் கருத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்” என அதிமுக அமைப்புச் செயலாளர் ஆதி ராஜாராம் கூறியிருந்தார்.

எங்களுக்கு என்று தனித்தன்மை உண்டு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே கூறியுள்ளார். அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அதிமுக தலைமை ஏற்கும் நபர்கள் கூட்டணிக்கு வரலாம். பொதுவெளியில் பேசி இருந்தால் அதுகுறித்து நாம் பதில் அளிக்கலாம், கட்சி நபர்களுக்குள் பேசும் கருத்துக்கு பதில் அளிக்க முடியாது.

நாங்கள் எதையும் சகித்துக் கொண்டு செல்லவில்லை. எங்களுக்கு என்று தனித்தன்மை உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை. எங்களை யாரையும் குட்டவும் விடவும் மாட்டோம். குனியவும் மாட்டோம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு பாஜக உடனான கூட்டணியில் உடன்பாடில்லை - பத்திரிக்கையாளர் தராசு ஷியாம்

இந்த நிலையில் அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிக்கையாளருமான தராசு ஷியாம் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “அண்ணாமலையில் நேற்றைய பேச்சின் மூலம் பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றே நினைக்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் பாஜகவுடனான கூட்டணியில் உடன்பாடில்லை என்றே தெரிகிறது. மேற்கு மண்டலத்தில் போட்டியிட நினைக்கும் சில பாஜகவினர் அதிமுகவுடனான கூட்டணி ஆமோதிக்கிறார்கள். அதேவேளையில் தென் மண்டலத்தில் போட்டியிட எண்ணுவோர் சசிகலா, ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோரது ஆதரவை எதிர்பார்க்கிறார்கள்.

இப்படியாக பாஜகவிற்குள்ளேயே இரு வேறு உணர்வுகள் உள்ளதாலேயே அடிப்படையான சிக்கல் எழுந்துள்ளது. இதனை வைத்து இயல்பாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திலேயே பாஜகவின் டெல்லி மேலிடம் உள்ளது. ஆனால் கர்நாடக தேர்தலில் டெல்லி தலைமை கவனமாக இருப்பதால் தமிழ்நாட்டில் நடக்கும் இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எட்டப்படும் என்பதில் வாய்ப்பு குறைவே. மேலும் அண்ணாமலையை மாற்றுவார்களா என்றால் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் அதற்கும் வாய்ப்பிருக்காது.” என கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே அதிமுக உடனான கூட்டணி குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 26ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியையும், அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவையும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.