தமிழ்நாடு

பிரதமரின் கவனம் ஈர்த்த சிப்பிப்பாறை நாய்களின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

பிரதமரின் கவனம் ஈர்த்த சிப்பிப்பாறை நாய்களின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

JustinDurai
பிரதமர் மோடியின் கவனம் ஈர்த்த சிப்பிப்பாறை நாய்கள் முதலாளிக்கு மட்டுமே விசுவாசமாக நடந்து கொள்ளும் சிறப்புடையது.
 
'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் ராஜபாளையத்தில் வளர்க்கப்படும் சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய் இனங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதத்துடன் புகழாரம் சூட்டினார். இதனால் நாடு முழுவதும் செல்லப்பிராணி பிரியர்களின் கவனம் ராஜபாளையத்தை நோக்கி திரும்பியுள்ளது.
 
சிப்பிப்பாறை நாய்கள் உடல் முழுவதும் பால் வெள்ளை நிறத்திலும், மூக்கு, கால் பாதம், அடி வயிறு போன்றவை ரோஸ் நிறத்திலும் பார்ப்பதற்கு தனி அழகாகவும், மிடுக்காகவும் காணப்படும். தன்னை வளர்க்கும் முதலாளிக்கு மட்டுமே விசுவாசமாக நடந்து கொள்வது இதன் தனிச்சிறப்பு.
சிப்பிப்பாறை நாய்கள் படு புத்திசாலி. இதன் வேகத்துக்கு இணையான நாய் கிடையாது. காற்றில் பறப்பது போல அழகாக, கம்பீரமாக ஓடிவரும். ஞாபகசக்தியும் அதிகம். தன் எஜமானரையும் ஞாபகம் வைத்திருக்கும்; எதிரிகளையும் நினைவில் வைத்திருக்கும்.
 
கோம்பை காவலுக்கு உகந்தது. அந்தக் காலத்தில் பண்ணையில் இருக்கும் ஆடு, மாடுகளை காட்டு விலங்குகள் வேட்டையாடாமல் தடுக்க இதைத்தான் நம்பினார்கள் தமிழர்கள். தனியான பண்ணை வீடுகளின் பாதுகாப்புக்கு ஒரு கோம்பை போதும்.
 
ராஜபாளையம், சிப்பிப்பாறை, அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி போன்ற உள்ளூர் நாய் இனங்களின் எண்ணிக்கை 90களிலேயே குறைந்துகொண்டே வந்தது. இவை காலங்காலமாக வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தவை. வேட்டைக்குத் தடை வந்ததும், இவற்றை வளர்ப்பதும் குறைந்துபோனது. இந்தக் காலங்களில்தான் வெளிநாட்டு வகை நாய்கள் இங்கு செல்வாக்கு பெற்றன.
 
ராஜபாளையம் நாய் வளர்ப்பு பண்ணையாளர் திவ்யா கூறுகையில், ''ராஜபாளையம் வகை நாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. சிப்பிப்பாறை வகை நாய் குட்டி ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் முன் பணம் செலுத்தி நாய்களுக்காக முன்பதிவு செய்கின்றனர், என்றார்.