தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து !

தமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து !

jagadeesh

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 3,713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 1,025 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் " தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுச் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், அரக்கோணம் - கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே சமயம் சென்னை சென்ட்ரல் - டெல்லி செல்லும் ராஜ்தானி சிறப்பு ரயில் அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.