காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திட்டமிட்டபடி வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தும், மத்திய அரசு இன்னும் ஆணையத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என அதன் தலைவர் விக்கிரமராஜா அறிவித்ததார். அதன்படி காலை 6 மணிக்கு தொடங்கிய கடையப்பு மாலை 6 மணி வரை தொடர உள்ளது.
இன்றைய போராட்டத்திற்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில் பெட்ரோல் பங்க்குகள் அனைத்தும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மருந்து வணிகர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவசர மருந்து தேவைக்கு 044-28191522 என்ற எண்ணை அழைத்தால், மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய, வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தமிழகத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கடைகள் என 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்றார். மேலும், வணிகர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும் தமிழகத்தின் வாழ்வுரிமை, நீராதாரத்தை பெறவே போராடத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 5-ந்தேதி தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதில் பங்கேற்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.