தமிழ்நாடு

கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி 

கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி 

webteam

கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

உலகம் முழுவதும் நவம்பர் 2 ம் நாள் கல்லறை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை யொட்டி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கத்தோலிக்க திருச்சபை கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத்தந்தை சேவியர் தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. பின்னர் குருமார்கள் கல்லறைகளுக்கு புனித நீர் தெளித்தனர். அங்கு கூடி இருந்த கிறிஸ்தவ பொதுமக்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களை நினைவு கூரும் வகையில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கிறிஸ்துவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கிறிஸ்தவர்கள் அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கிறார்கள். இது, கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய தினம் புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்துக்குச் சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தினர். 

மேலும் கல்லறையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களின் ஆன்மாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதனால் தங்களின் முன்னோர்களின் ஆசிர்வாதம் எப்போது தங்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்தக் கல்லறை திருநாளையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு சென்று தங்களின் முன்னோர்களை வழிபட்டனர்.

இந்நிலையில் வேளாங்கன்னியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்த ஆயிரம் பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். அங்கு அமைந்துள்ள சுனாமி ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத் திருநாள் வழிபாடு நடைபெற்றது.