தமிழ்நாடு

பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தொடங்கிய புத்தக கண்காட்சி!

பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தொடங்கிய புத்தக கண்காட்சி!

webteam

ஏடிஎம், இலவச வைஃபை, சிசிடிவி என பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கியது. 

தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 42ஆவது சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், இளமையில் இருந்தே புத்தக வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 20ஆம் தேதி வரை புத்தகக்காட்சி நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டியிலும் இந்த முறை பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் கண்டுபிடிப்பு, வரலாறு. பொது அறிவு, சிறு கதைகள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஒன்றரை கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வார நாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பெறும் வசதி முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், பதிப்பகங்களைப் பொறுத்து கூடுதல் தள்ளுபடியும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, ஏடிஎம், இலவச வைஃபை, செல்போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பிற்காக அரங்கை சுற்றிலும் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

வாசகர்களை ஈர்க்கும் வகையில் தினமும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‌பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.