தமிழ்நாடு

“நெல்லையில் புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்”- சிறப்பு அதிகாரி கருணாகரன்

“நெல்லையில் புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்”- சிறப்பு அதிகாரி கருணாகரன்

kaleelrahman

நெல்லை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என மொத்தமாக 87 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன் பேட்டியளித்துள்ளார்.


'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தலைமையில் ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

கடற்கரை பகுதிகளில் உள்ள அனைத்து புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புயல் மீட்பு முன்கள பணியாளர்கள் 633 பேர் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.


காவல்துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகிய அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். குளங்களின் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என 87 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 11, அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 32, ஓரளவு பாதிப்பு பகுதிகள் 13, குறைந்த அளவு பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 31 என கண்டறியப்பட்டுள்ளன.

பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், கடலோரபகுதி என 3 இடங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் 20 நபர்களாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்படும் சூழலில் பாதிக்கப்பட கூடிய தாழ்வான பகுதி மக்களை முகாம்களுக்கு வர அறிவுறுத்தப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து விஜய நாராயணம் பெரிய குளம், இராதாபுரம் குளம், கூட்டபுளி கடலோர கிராமங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.