தமிழ்நாடு

டாஸ்மாக்கில் உள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் - உயர்நீதிமன்றம்

டாஸ்மாக்கில் உள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் - உயர்நீதிமன்றம்

Veeramani

டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்கில் பார் உரிமம் வழங்குவதற்கான டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்றார்.

மேலும் டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பார்களை நடத்த சட்டப்படி அனுமதியில்லை என்று நீதிபதி கூறினார். பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே இருப்பதாக கூறிய நீதிபதி, டாஸ்மாக் இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அதன் அருகிலேயே தின்பண்டங்கள் விற்க, பாட்டில்களை சேகரிக்க அனுமதிக்க முடியாது என்றார்.

பொது இடங்களில் மது அருந்தச் சட்டம் அனுமதிக்காத நிலையில், டாஸ்மாக்கிலும் மது அருந்த அனுமதிக்க முடியாது என்று அவர் தெளிவுப்படுத்தினார். எனவே டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.