செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து, மீன்பிடி அனுமதிச் சீட்டுடன் சுமார் 400-க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று முன்தினம் கடலுக்குள் இறங்கி உள்ளனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மீனவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி கடலில் வீசியதால், மீனவர்கள் உயிர்பிழைத்தால் போதுமென கரை திரும்ப முயன்றுள்ளனர்.
ஆனால் நெடுந்தீவு தென்கடல் பகுதியில் வைத்து 17 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மூலம் மன்னார் நீதிமன்ற நீதிபதி ரத்தீப் அகமது முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்கச்சிமடத்தில் போராடிய மீனவர்களும், உறவினர்களும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.