தமிழ்நாடு

'அழகர் மலை தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது'- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

'அழகர் மலை தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது'- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

jagadeesh

மதுரை அழகர் மலைக்கு உரிமை கோரிய வழக்கில், அழகர் மலை கள்ளழகர் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கள்ளழகர் கோயில் நிர்வாகத்திற்கு அழகர் மலை சொந்தமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அழகர் மலையின் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோயில் நிர்வாகத்திற்கு வழங்க முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அழகர் மலை ‌வனப்பகுதியில் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு நடைபெற்று கொண்டிருந்தபோது சமாதான நடவடிக்கையாக சாலை விரிவாக்கத்திற்கு மட்டும் கூடுதலாக 25 அடி ஒதுக்கப்படும் என்ற தமிழக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.