தமிழ்நாடு

தீபாவளி பண்டிகைக்காக பாட்டி வீட்டிற்குச் சென்ற அக்கா தம்பி குளத்தில் மூழ்கி பலி

தீபாவளி பண்டிகைக்காக பாட்டி வீட்டிற்குச் சென்ற அக்கா தம்பி குளத்தில் மூழ்கி பலி

kaleelrahman

தீபாவளி பண்டிகையை கொண்டாட பாட்டி வீட்டிற்குச் சென்ற அக்காள் தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட மறுகாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மகள் ஹரிணி (7) மற்றும் தம்பி மகன் லோகேஷ் (6) ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் மறுகாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி உள்ளனர். அப்போது குளத்தின் அருகே சென்ற லோகேஷ், தவறி குளத்தில் விழுந்துள்ளார். உடனே அருகிலிருந்த ஹரிணி, லோகேஷை காப்பாற்ற குளத்தில் இறங்கியுள்ளார்.

இதையடுத்து இருவரும் கரை திரும்பாததால் அருகில் இருந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கு இருந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.