தமிழ்நாடு

“சென்னையில் 5 லட்சம் கேமராக்கள்” : காவல் ஆணையர் தகவல்

“சென்னையில் 5 லட்சம் கேமராக்கள்” : காவல் ஆணையர் தகவல்

webteam

சென்னையில் 5 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டால் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் வந்து விடும் என பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதனால் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதன் அவசியம் குறித்து அடிக்கடி கூறி வருகிறார். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மூன்றாவது கண் எனும் கண்காணிப்பு கேமரா பொருத்த பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாடுகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இன்று காலை வளசரவாக்கத்தில் தொடங்கி வைத்தார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் “கண்காணிப்பு கேமராக்கள் சென்னை முழுவதும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் குழந்தை கடத்தல், குழந்தையை குப்பையில் வீசி விட்டு சென்ற சம்பவம், பீகார் கொள்ளையர்களை பிடித்தது போன்றவற்றில் கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவியாக இருந்தது. பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் போலீசார் செயல்பட முடியாது. இந்தியாவில் சட்டம், ஒழுங்கை நிர்ணயிப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளது. அதில் சென்னை காவல்துறை பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் விருது வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களின் வீடுகள், அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தால் 80 சதவீதம் பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். மற்ற பொது இடங்களில் அரசு  மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் சிசிடிவி கேமரா வைத்து விடலாம். நள்ளிரவில் ஒரு பெண் தனியாக சென்று வரும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் விஸ்வநாதன், 50 மீட்டர் அளவுக்குள் ஒரு சிசிடிவி கேமரா என்று திட்டமிடப்பட்டு, 3 மாத காலத்தில் அதை முடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 5 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டால் சென்னை மாநகர பாதுகாப்பு முழுவதும் கட்டுப்பாட்டில் வந்து விடும். அடுத்த ஆண்டுக்குள் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவதில் முழுமையாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதில் 3-வது கண் எனப்படும் சிசிடிவி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.