ஏகே ராஜன்  முகநூல்
தமிழ்நாடு

EXCLUSIVE | “நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம்!” - ஏ.கே.ராஜன்!

PT WEB

செய்தியாளர்: விக்னேஷ் முத்து

மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏகே ராஜன் தெரிவித்துள்ளார். இதனால் நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.கே.ராஜன் - நீட்

“சட்டரீதியாகவோ, சட்டமன்றம் மூலமாகவோ, நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த தனித்த பேட்டியில், "நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் இருந்து மருத்துவம் படிப்போர் எண்ணிக்கை குறைந்துவிடும்.

பல்கலைக்கழகங்கள் நடத்துவதில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில், மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதாக எனது பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகச் சட்டங்களில் தெளிவான விதிகள் உள்ளது, அதன்படி மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. பல்வேறு பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை அரசு உறுதி செய்யவேண்டும்” என்றார்.

முன்னதாக 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு, நீட் தேர்வு ஏழைகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என்று அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.