அஜித் ரசிகருக்கு நேர்ந்த பரிதாபம் pt desk
தமிழ்நாடு

சென்னை: தவெக மாநாட்டிற்குச் சென்ற அஜித் ரசிகருக்கு நேர்ந்த பரிதாபம்

தவெக மாநாட்டில் மயங்கி விழுந்த சென்னையை சேர்ந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

PT WEB

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை காண நேற்று காலை சென்னை கீழ்ப்பாக்கம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவரது மகன் சார்லஸ் (34), தனது நண்பர்களுடன் ஆம்னி பேருந்தில் சென்றுள்ளார்.

தவெக மாநாடு

அங்கு சென்ற அவர், மாநாட்டில் கூட்ட நெரிசல் மற்றும் வெப்பம் தாங்காமல் சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து சார்லஸை அங்கிருந்த சுகாதாரக் குழுவினர் மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த சார்லஸின் பெரியம்மா வேளாங்கண்ணி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்...

“சார்லஸ் நேற்று (நேற்று முன்தினத்தை குறிப்பிட்டு) வழக்கம்போல் பணிக்குச் சென்று விட்டு வீடு திரும்பினான். விஜய் மாநாட்டிற்கு போவதாக சொன்னான். அதற்கு நான், ‘நீ தல ரசிகர் ஆச்சே, நீ எதற்காக விஜய் மாநாட்டிற்குச் செல்கிறாய்?’ என கேட்டேன். ‘தல அஜித்தே சொல்லி விட்டார்; அதனால் நாங்கள் விஜய்யை ஆதரிக்கச் செல்கிறோம்’ என சொல்லிவிட்டு புறப்பட்டான்.

இதையடுத்து மாநாட்டு திடலுக்குச் சென்ற அவன், தன் தங்கையின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். அதன் பின்னர் சிறிது நேரத்திற்குள்ளாக மருத்துவமனையில் இருந்து சார்லஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரிக்கையில், அங்கேயே அவன் மயங்கி விழுந்ததாகவும், பின் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறியுள்ளனர்” என்று கண்ணீர் மலக கூறினார்.

தாய் தந்தை இல்லாமல் தங்கையுடன் ஏழ்மை சூழலில் வாழ்ந்து வந்த சார்லஸிற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு நண்பர்களுடன் சென்று இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.