தமிழ்நாடு

ஏர்செல் வாடிக்கையாளர்கள் 48 மணி நேரமாக அவதி

Rasus

பல்லடம் பகுதியில் கடந்த 48 மணி நேரமாக ஏர்செல் டவர் செயல்படவில்லை. எந்தவிதமான அழைப்பும் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி மற்றும் பண்ணைக்கோழி பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பணிபுரிய பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் நெகமம் பொள்ளாச்சி பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். அனைவருக்கும் கைப்பேசி என்பது இன்றியமையாததாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி முக்கால்வாசி மக்கள் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனார் ஏர்செல் நெட்வொர்க்கையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 48 மணி நேரமாக ஏர்செல் செல்போன் டவர் செயலிழந்து காணப்படுகிறது. இதனால் பல்லடத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் எந்தவிதமான அழைப்பும் இல்லாமல் கடந்த 48 மணி நேரமாக மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். எந்தவிதமான தொடர்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏர்செல் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.