விண்ணில் சாகசம் புரியும் சேத்தக் pt web
தமிழ்நாடு

கண்கொள்ளாக்காட்சியில் மெரினா... மிரளவைத்த போர் விமானங்களின் அணிவகுப்பு..!

ஹெலிகாப்டர்கள் தொடங்கி, மிக், மிராஜ், தேஜஸ், ரஃபெல், சுகாய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.

PT WEB

இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி நடைபெறும் விமான சாகச நிகழ்வுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஹெலிகாப்டர்கள் தொடங்கி, மிக், மிராஜ், தேஜஸ், ரஃபெல், சுகாய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன. 20 வகையான அணிகளை சேர்ந்த விமானிகள் வானை வர்ணஜாலமாக்கினர்.

சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானக் குழுக்களுக்கு சேரா, சோழா, பல்லவா, காவிரி, காஞ்சி, தனுஷ், மெரினா என தமிழில் பெயர் வைக்கப்பட்டது. வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்றன.

முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். தலைமை ஏர் மார்ஷல் ஏபி சிங் உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகளும் மெரினாவுக்கு வருகை தந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும், அரசு உயரதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரஃபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தன. பிரெஞ்சு விமான நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ஹெலிகாப்டர்கள், பழமையான விமானமான டகோடா, அதிநவீன பயிற்சி விமானமான ஹார்வர்ட் என விமானங்களைக் கொண்டு வீரர்கள் அட்டகாசமான வான்வெளி சாகசத்தில் ஈடுபட்டனர்.

கூட்ட நெரிசல் காரணமாக மக்களில் சிலர் மயக்கமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 20 க்கும் மேற்பட்ட அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.