பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதை முன்கூட்டியே கணித்த திமுக, அவரை வீழ்த்த, அந்தத் தொகுதியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாகக் களம் கண்டது. முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரை களமிறக்கியது. அதிமுக தரப்பு வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன்.
கோவையில் 'WAR ROOM' அமைத்து வியூகம் வகுத்த அண்ணாமலை, தொகுதிக்கென தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரவேற்பை பெற்றார். அவரது வெற்றியை மிகவும் எதிர்பார்த்தது பாஜக தேசியத் தலைமை. ஆனால் அவர், தோல்வியைத் தழுவினார். அதே நேரத்தில், 4,50,132 வாக்குகள் பெற்று, 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் அண்ணாமலை.
கோவையில், பாஜகவின் இந்த வாக்கு விழுக்காடு, அசாதாரணமானது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.
கோவையில் திமுக வெற்றிக்கு உழைத்தது, தேர்தல் பொறுப்பாளரான தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா.
அதிமுக வேட்பாளர் சிங்கைராமச்சந்திரன், 2,36,490 வாக்குகளுடன் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதிமுகவுக்கு எப்போதும் இருந்த 32 விழுக்காடு வாக்குகள், 17 விழுக்காடாக சரிந்தது. தங்கள் கோட்டையான கோவையை தக்கவைக்க தவறிவிட்டது அதிமுக. இதற்கு எஸ்.பி.வேலுமணியின் செயலின்மையே காரணம் என்பது அதிமுகவினரின் குற்றச்சாட்டு.
2021 சட்டசபைத் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளிலும் வென்றது. குறிப்பாக, கோவை மக்களவைத் தொகுதியில், கோவை தெற்கு தவிர, அனைத்து இடங்களையும் அதிமுகதான் வசப்படுத்தியது. அப்படி இருந்தும், மக்களவைத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, அண்ணாமலை 2 ஆம் இடத்தை பிடித்திருப்பதற்கு, திரைமறைவு வேலைகள் உள்ளன என்பது விமர்சகர்களின் கருத்து.