பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என்று விளம்பரம் செய்யும் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேரை சிபிஐ கைது செய்தநிலையில், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முக்கிய பிரமுகர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி, இன்று பொள்ளாச்சியில் திமுக எம்பி கனிமொழி தலைமையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பி கனிமொழி பேசுகையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பேரை காவல்துறை வெளியிட்டு அவர்களை அச்சுறுத்தியதோடு, இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களை அந்த கும்பல் மிரட்டி வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து, ஆளுங்கட்சி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ,க்கள் உடன் எடுத்த புகைப்படங்களை பொதுமக்களிடம் காட்டினார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தட்டிக் கேட்காமல் இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து விடுவார்கள் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என்று விளம்பரம் செய்யும் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், தான் விவசாயி என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை எதிர்த்து பேசி வருகிறார் என்றும், தனது கட்சிக்காரர்களையும், தனது பதவியை பாதுகாத்துக்கொள்ள தமிழக பெண்களை பழிவாங்கும் நடவடிக்கையில், முதல்வர் ஈடுபட்டு வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
விரைவில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து தண்டனை வாங்கித் தருவோம் என்றும், அவர் உறுதி அளித்தார்