தமிழ்நாடு

ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!

ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!

சங்கீதா

மதுரையில் ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் படத்தை கிழித்து எறிந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக கிட்டத்தட்ட இரண்டாக பிரிந்து கிடக்கிறது. குறிப்பாக கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். என அவர்களது ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். இரு அணியினரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமையை ரத்துசெய்ய வேண்டும் என சி.வி.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்களின் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்க, ஓ.பி.எஸ் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார்.

ஓ.பி.எஸ் வெளியேறும்போது சிலர் வாட்டர் பாட்டில்களை வீசும் காட்சிகளையும் பார்க்க நேர்ந்தது. இதையடுத்து அன்றிரவே டெல்லி சென்ற ஓ.பி.எஸ். தற்போது சென்னை திரும்பியுள்ளார். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்சிக்கு அதிமுகவின் ஒற்றைத்தலைமையே, பொதுச்செயலாளரே என்ற முழக்கத்தோடு அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

இதனையடுத்து தனது பிரச்சார வாகனத்தில் ஓ.பி.எஸ். புறப்பட்டபோது, பிரச்சார வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த ஈ.பி.எஸ். படத்தை பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது காலணியால் ஈ.பி.எஸ். படத்தை தாக்கியதோடு ஈபிஎஸ்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஈ.பி.எஸ். படத்தையும் அழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து ஓ.பி.எஸ். படம் அகற்றப்பட்டு வந்தது. அத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான “நமது அம்மா” நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்ஸை நீக்கியுள்ளதால், அக்கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதையே காட்டுகிறது.