தமிழ்நாடு

``இபிஎஸ் கூறினால் ஓபிஎஸ்ஸிடம் நேரில் சமாதானம் பேசுவேன்”- தமிழ் மகன் உசேன் பிரத்யேக பேட்டி

``இபிஎஸ் கூறினால் ஓபிஎஸ்ஸிடம் நேரில் சமாதானம் பேசுவேன்”- தமிழ் மகன் உசேன் பிரத்யேக பேட்டி

நிவேதா ஜெகராஜா

"ஓபிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை செல்ல எடப்பாடி பழனிசாமி கூறினால், நேரில் செல்வேன்" என்று புதிதாக தேர்வாகி உள்ள அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் புதிய அவைத்தலைவராக தேர்வாகி உள்ள தமிழ் மகன் உசேன் இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று விட்டு வெளியே வந்தபோது புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஜூலையில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் எந்தப் பிரச்சினையும் நிகழ வாய்ப்பில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு போக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது தொடர்பான எந்த ஆலோசனையும் தற்போது நடைபெறவில்லை. ஒற்றைத் தலைமை கோரி ஓபிஎஸ்ஸிடம் 3 நாட்கள் சமாதான பேச்சு வார்த்தை நானே நடத்தினேன். இந்நிலையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்தால் நான் ஓபிஎஸ்ஸை சந்திக்க செல்வேன்" என்று தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெளியே அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக பொதுக்குழு எழுச்சியான பொதுக்குழு. வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு. ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவு ஒற்றைத்தலைமை வேண்டும் என்பது தான். அது நிறைவேறும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வர சூழ்நிலைகள் இருக்கிறது. அடுத்த பொதுக்குழுவுக்கான தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்" என்று கூறினார்.

- செய்தியாளர்: சுப்பிரமணியன்