எடப்பாடி பழனிசாமி ட்விட்டர்
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் அமளி - ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள், ஆளுநருடன் சந்திப்பு!

webteam

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுப்பட்டு, அவையை புறக்கணித்தனர்.

நேற்றைய தினம் அதிமுகவினர் அவைக்கு வராத நிலையில், இன்றும் கருப்பு உடை அணிந்து அவைக்கு வந்ததனர். பேரவை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் மற்றும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

speaker appavu

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் அளிக்கப்படும். உங்களுக்காக கேள்வி நேரத்தை ஒத்திவைக்க முடியாது. சட்டமன்ற விதிகளை மதிக்க வேண்டும், சட்டமன்றத்தை நடத்த விடாமல் தொடர்ந்து இடையூறு செய்கின்றீர்கள். அவையின் மாண்பை கெடுக்கின்றனர். இது பொதுக்கூட்ட மேடை இல்லை. அவையை, அவை மரபுகளை, மாண்புகளை, ஜனநாயகத்தை மதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர், “அவை மாண்பை நீங்கள் மதிப்பதில்லை. சட்டமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுவது வன்மையாக கண்டிக்கப்படுகிறது. எதற்காக இந்த புறக்கணிப்பை தொடர்ந்து செய்கிறீர்கள் என தெரியவில்லை. இதை அரசியலாக்க வேண்டும் என்ற உங்களின் நோக்கம் தெரிகிறது” என தெரிவித்தார்.

பின்னர் “இன்று ஒரு நாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க, அதிமுகவினர் விலக்கி வைக்கப்படுகின்றனர்” என சபாநாயகர் உத்தரவிட்டார்.

EPS

பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சஸ்பெண்ட் செய்ய தீர்மானத்தை முன்மொழிகிறேன்” எனக் கூறினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தில் ஒரு சிறிய திருத்தம். இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் வேண்டாம். ஒரு நாள் மட்டும் இருக்கட்டும் மீண்டும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவோம்” என்றார். பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கலவரத்தில் ஈடுபட்ட நபர்கயை மட்டும் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக கூறினார்.

அதன்பின், அவை நடவடிக்கைகளில் குந்தகம் விளைவித்த அதிமுக உறுப்பினர்களை, இன்று ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கையில் இருந்து விலக்கி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இபிஎஸ் - அப்பாவு

சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம் செய்த பிறகு புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ ஆகியோர் “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை அவசியம். பேரவையில் அதிமுக பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை” என சபாநாயகர் நடவடிக்கையை விமர்சித்தனர்.

இதைத்தொடர்ந்து அதிமுக-வினர் அனைவரும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையென அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து வெளியேவந்த பேசிய இபிஎஸ், “கள்ளக்குறிச்சியில் நீதிமன்றம், காவல்நிலையம் வாசலிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளன. காவல் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்புள்ளது. ஆளுங்கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்திருக்க முடியாது. கல்வராயன் மலையில் வனத்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சியிருக்க முடியாது; வனத்துறை அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.