ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாகனங்களில் தாக்குதல் நடத்தியதாக அமமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், உட்கட்சி பூசலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலை திசைதிருப்ப அ.ம.மு.க-வினர் மீது அதிமுக-வினர் வீண்பழி சுமத்துவதாக குற்றஞ்சாட்டி, இவ்விவகாரத்தில் காவல்துறை தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.ம.மு.க சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு வீசி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தை அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தூண்டுதலின் பேரில் அ.ம.மு.கவினர் நடத்தியதாக குற்றஞ்சாட்டி அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த மாறன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் போலீசார், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அ.ம.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அ.ம.மு.க. தரப்பில் “உட்கட்சி பூசல் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலை திசை திருப்ப அ.ம.மு.க-வினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது” என அதிமுக மீது குற்றஞ்சாட்டி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வேலு கார்த்திகேயன் புகார் மனு அளித்துள்ளார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த சில நாட்களாக அ.தி.மு.க கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக கோஷ்டி மோதல்கள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அதுபோலவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் உட்கட்சி கோஷ்டி மோதல் ஏற்பட்டிருந்திருக்கும். அந்த கோஷ்டி மோதலை திசைதிருப்ப அ.ம.மு.க-வினர் மீது தாக்குதல் நடத்தியதாக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் அஞ்சலி செலுத்திய பிறகு அமம்க கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உட்பட அ.ம.மு.க-வினர் அனைவரும் கலைந்து சென்று விட்டனர். ஆகவே நடந்த தாக்குதல் சம்பவத்தில் அ.ம.மு.க-வினர் தலையீடு எவ்விதத்திலும் இல்லை. அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை காவல்துறை முறையாக ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க-வினர் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதைபோல் வெளிக்காட்டிக்கொள்ள, மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி புகார் அளிப்பது தொடர்ந்து வருவகிறது. இது கண்டிக்கத்தக்கது” என அவர் தெரிவித்தார்.