தமிழ்நாடு

``திமுகவின் பி-டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்...தொண்டர்கள் அவரை மன்னிக்கமாட்டர்”-ஜெயக்குமார்

``திமுகவின் பி-டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்...தொண்டர்கள் அவரை மன்னிக்கமாட்டர்”-ஜெயக்குமார்

நிவேதா ஜெகராஜா

`திமுகவின் பி-டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார், கட்சியை முடக்கும் பணியில் ஈடுபடும் ஓபிஎஸ்-ஐ தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள்’ என்று கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நமது அம்மா நாளிதழில் நிதி கையாடலில் முறைகேடாக செயல்பட்டதின் காரணமாக மருது அழகுராஜ் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பல கட்சிகளுக்கு சென்ற மருது அழகுராஜ், தற்போது கூலிக்கு மாறடிக்கும் செயலாக ஓபிஎஸ் -க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பொதுக்குழு கூட்டத்தில் அடையாள அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே சட்டிவிதிகள்படி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால் பொதுக்குழு கூட்டம் குறித்து மருது அழகுராஜ் தவறாக பேசியுள்ளார். அவரது பேச்சு தொண்டர்களை கோவபடுத்தி உள்ளது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கொடநாடு கொலை கொள்ளையை பொறுத்தவரை தவறு செய்தவர்களை போர்கால அடிப்படையில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்படி தொடர் குற்றங்களை செய்தவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக தான். எங்கள் மடியில் கனம் இல்லை அதனால் பயம் இல்லை. எந்த வழக்கையும் பார்த்து அதிமுக பயப்படாது. எந்த வழக்கையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.

ஓபிஎஸ் கட்சி விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். சசிகலா மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தினகரனை ரகசியமாக சந்திக்கிறார். அவருடைய மகன் திமுகவிற்கு ஆதரவாக பேசுவதை தொண்டர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். திமுகவின் B - டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். கட்சியை முடக்கும் செயலிலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் அவரை தொண்டர்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஜூலை 11ஆம் தேதி நிச்சயம் பொதுக்குழு நடைபெறும். சசிகலா மற்றும் தினகரன் அதிமுக கட்சிக்கு திரும்ப முடியாது. அவர்கள் வேன் எடுத்துகொண்டு ஊர் ஊராக செல்வது நேர விரயம்; பண விரயம்; ஆற்றல் விரயம்; பெட்ரோல் விரயம். அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார்.

ஜெயக்குமாரின் பேட்டியை வீடியோ வடிவில் இங்கு காண்க:

செய்தியாளர்: சந்தான குமார்